சென்னை: பிஇ, பிடெக் பொறியியல் படிப்புக்கான 3-ஆம் சுற்று கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், 11 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவரும் சேரவில்லை எனவும் 442 கல்லூரியில் 263 கல்லூரிகளில் 50 விழுக்காட்டிற்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர். மேலும் 61 கல்லூரியில் 10 விழுக்காட்டிற்கும் குறைவான மாணவர்களும், 37 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலும் மாணவர்கள் சேர்ந்துள்ளதால் கல்லூரிகளை நடத்துவதில் பெரும் சிரமம் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வரும் திண்டுக்கல், அரியலூர், நாகப்பட்டினம் ஆகியவற்றிலும் 50 விழுக்காடு இடங்கள் நிரம்பவில்லை. பொறியியல் படிப்பிற்கான 3 சுற்றுகள் கலந்தாய்வின் முடிவில் சுமார் 53 ஆயிரத்து 991 இடங்கள் காலியாக உள்ளன. துணைக்கலந்தாய்விற்கு சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்விற்கு மே 5ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரையில் விண்ணப்பம் பெறப்பட்டன. அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 22ஆம் தேதி வெளியிடப்பட்டன. ஆன்லைன் மூலம் 3 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறுகிறது.
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுக் கலந்தாய்வு ஜூலை 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்விற்கு இதுவரையில் 442 கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்து 19 ஆயிரத்து 346 இடங்களில் ஒற்றைச் சாளர முறையில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 780 கலந்தாய்வின் மூலம் நிரப்ப அனுமதிக்கப்பட்டது.
இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 744 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டன.
சிறப்பு பிரிவினருக்கான விளையாட்டு பிரிவில் 385 மாணவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 163 மாணவர்களுக்கும், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 137 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு 3 ஆயிரத்து 143 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு பொதுப்பிரிவில் 928 இடங்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 154 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொதுப்பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெற்றது. 3 சுற்றுக்கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், அதன் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 721 இடங்கள் அனுமதிக்கப்பட்டன. முதல் சுற்றில் பங்கேற்க 24 ஆயிரத்து 976 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதில், 20 ஆயிரத்து 162 மாணவர்கள் கலந்துக் கொண்டனர். அதில் 15 ஆயிரத்து 139 மணாவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், 14ஆயிரத்து 298 மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
2ஆம் சுற்றுக்கு 64 ஆயிரத்து 288 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு, 49 ஆயிரத்து 719 மாணவர்கள் பதிவு செய்தனர். அவர்களில் 35 ஆயிரத்து 476 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 33 ஆயிரத்து 649 மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். 3 ஆவது சுற்றுக் கலந்தாய்விற்கு 89 ஆயிரத்து 695 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதில், 65 ஆயிரத்து 209 மாணவர்கள் பதிவு செய்தனர். 44 ஆயிரத்து 431 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்ததில், 33 ஆயிரத்து 4 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 3 சுற்றுக் கலந்தாய்வில் 95 ஆயிரத்து 46 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையில் 80 ஆயிரத்து 951 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 14 ஆயிரத்து 95 மாணவர்கள் இன்னும் சேரவில்லை.
2023ஆம் ஆண்டில் 95 ஆயிரத்து 46 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டில் 84 ஆயிரத்து 812 மாணவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில், 79 ஆயிரத்து 183 மாணவர்கள் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டில் 12 ஆயிரத்து 59 இடங்கள் அனுமதிக்கப்பட்டது. அதில், பங்கேற்க 28 ஆயிரத்து 425 மாணவர்கள் தகுதிப் பெற்றனர். அவர்களில் 20 ஆயிரத்து 872 மாணவர்கள் பதிவு செய்ததில், 11 ஆயிரத்து 58 மாணவருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையில் 8ஆயிரத்து 475 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டில் 8 ஆயிரத்து 759 மாணவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப்பட்டதில், 8 ஆயிரத்து 263 மாணவர்கள் சேர்ந்தனர்.
இந்த நிலையில் கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி கூறும்போது, "பொறியியல் படிப்பில் 3ஆம் சுற்றுக் கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. அதில் 65.08 விழுக்காடு இடங்கள் நிரம்பி உள்ளது. அதாவது 1 லட்சத்து 44 ஆயிரத்து 652 இடங்களில் 94 ஆயிரத்து 138 இடங்கள் நிரம்பி உள்ளது. 3ஆவது சுற்று கலந்தாய்வின் முடிவில் 44 ஆயிரத்து 431 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3 ஆவது சுற்றுக் கலந்தாய்வில் தான் முதல், 2ஆம் சுற்றில் இடம் கிடைக்காத 1410 மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
இதன் மூலம் மாணவர்களுக்கு விருப்பும் கல்லூரிகளை பதிவு செய்யும் முறை சரியாக புரியவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது. கடந்தாண்டு 55 ஆயிரத்து 846 இடங்கள் காலியாக இருந்தது. நடப்பாண்டில் 50 ஆயிரத்து 514 இடங்கள் காலியாக உள்ளது. மாணவர்களுக்கு பொறியியல் படிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்து உள்ளது. 16 பொறியியல் கல்லூரிகளில் 100 விழுக்காடு இடங்களும் நிரம்பி உள்ளது. 11 பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவரும் சேரவில்லை.
90 விழுக்காட்டிற்கும் மேல் 104 கல்லூரியிலும், 80 விழுக்காட்டிற்கும் மேல் 186 கல்லூரியிலும், 50 விழுக்காட்டிற்கும் மேல் 263 கல்லூரியிலும் மாணவர்கள் இடங்களை தேர்வு செய்துள்ளனர். 10 விழுக்காட்டிற்கும் குறைவாக 61 கல்லூரியிலும், 37 கல்லூரிகளில் ஒற்றை இலகத்திலும் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 10 விழுக்காட்டிற்கும் குறைவாக மாணவர்கள் சேர்ந்துள்ள கல்லூரிகளை அண்ணா பல்கலைக் கழகம் ஆய்வு செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீட் பயிற்சி வகுப்பை 11ஆம் வகுப்பிலேயே தொடங்குக - தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!