பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். இதற்கு பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் கல்வியாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் இந்தத் தேர்வினை கரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்த பின்னர் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களில் இருக்கிறார்களா என்பது குறித்தும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் யாராவது இருக்கிறார்களா என்ற விவரத்தையும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அப்பொழுது பள்ளி கல்லூரிகள் செயல்பட தடை எனவும், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் மட்டுமே திருத்த அனுமதிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு அதிகரித்துவரும் சூழலில், இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நாளை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். அப்பொழுது, தேர்வினை நடத்தினால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை ஒத்திவைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் பார்க்க: பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது!