கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் எதிரொலியாக மார்ச் 27ஆம் தேதி தொடங்க வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதியில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இருப்பினும், தற்போதுவரை கரோனாவின் தாக்கம் குறையவில்லை. கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டன. பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26ஆம் தேதி நடைபெறவேண்டிய தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று 24ஆம் தேதி நடந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத முடியாத பல ஆயிரம் மாணவர்களுக்கு பிறகு தேதி அறிவிக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்தச் சூழலில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளனர்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை உயர் அலுவலர் கூறுகையில், "பத்தாம் வகுப்பு மாணவர்கள் எதிர்காலத்தில் உயர் கல்விக்கு செல்வதற்காகவும், வேலைக்கு செல்வதற்காகவும் தேர்வினை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளின் பட்டியல், மக்கள் நல்வாழ்வுத் துறையிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
அந்தப் பகுதிகளிலிருந்து தேர்வு மையங்களை வேறு இடத்திற்கு மாற்றி தேர்வு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் தேர்வு மையத்தில் அமர வைக்கப்படுவார்கள்.
மாணவர்கள் தற்போது உள்ள விடுமுறையை பயன்படுத்தி தேர்வுக்கு தங்களை தயார் செய்துகொள்ளலாம். ஒவ்வொரு தேர்விற்கும் விடுமுறைகள் அதிகளவில் அளிக்கப்படாமல் அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் பத்து நாட்களுக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளோம். தேர்வு நடைபெறும் தேதி மற்றும் கால அட்டவணை கரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்த பின்னர் அறிவிக்கப்படும். எனவே மாணவர்கள் தங்களை தேர்வுக்கு தயார் செய்துகொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கேன்சர் மருந்து கிடைக்காமல் தவித்த தமிழ்நாட்டு நோயாளி; கைகொடுத்த கேரளா!