சென்னை: வடபழனி கங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலு. இவர் பைனான்ஸ் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில், வேலு, அவரது குடும்ப உறுப்பினர்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் பணம், சொத்து ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டதாகக் கூறி சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மோகன் குமார் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், வேலு, அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி, தாயார் நாகரத்தினம், சகோதரர் முருகன் ஆகியோர் மீது காவல் துறையினர் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, நான்கு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனு தாக்கல்செய்தனர்.
இந்த மனு நீதிபதி டி.வி. தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புகார் அளித்த மோகன்குமார் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல்செய்யப்பட்டது. பிணை வழங்க எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
சுமார் 115 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்துகள், பணத்தை அவர் ஏமாற்றியுள்ளார். கடன் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதில் பல நிறுவனங்களின் சொத்து ஆவணங்களும் அடங்கியுள்ளதால் முன்பிணை மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அனைத்துத் தரப்பு வாதங்களுக்குப் பிறகு உத்தரவிட்ட நீதிபதி தமிழ்ச்செல்வி, வழக்கு விசாரணை இன்னும் முடிவடையவில்லை. இந்த நிலையில் வேலு, நாகரத்தினம் முருகன் உள்ளிட்டோருக்கு முன்பிணை வழங்க முடியாது எனத் தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : காவல் துறை அபராதம் கரோனா காலத்தில் இரு மடங்கு உயர்வு