சென்னை: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு வருகிற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரத்து 150 வாக்குச்சாவடிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, தகுந்த காவல் அலுவலர்கள், காவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து காவல் துறையில் கூறியுள்ளதாவது, "பொதுமக்களிடையே வாக்குப்பதிவு தொடர்பான நம்பிக்கையை வளர்க்கும் வகையில் காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்புகள் நடத்தப்பட்டன.
தேர்தல் தொடர்பான புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த தேர்தலின்போது நடைபெற்ற குற்றங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மேல்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
846 அதிரடிப்படைகள் அமைப்பு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் வெளிப்படையாகவும், அமைதியாகவும் நடைபெறும் வகையில் காவல் அலுவலர்கள், காவலர்கள் கொண்ட ஆயிரத்து 343 நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் நிலவும் பகுதிகளுக்கு விரைந்துசென்று தீர்வு காணும் வகையில் 846 அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத மதுபான விற்பனை, ஆயுதங்கள் கடத்துவது, தேர்தல் நடைபெறும் இடத்திற்கு சம்பந்தமில்லாத நபர்கள் வருவதைத் தடுக்கும் வகையில் 455 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டுவருகிறது.
சென்னையில் 18 ஆயிரம் காவலர்கள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடக்கும் வகையில், தாலுகா, ஆயுதப்படையினைச் சேர்ந்த 17 ஆயிரத்து 788 காவல் அலுவலர்கள், 71 ஆயிரத்து 74 ஆண், பெண் காவலர்கள், தமிழ்நாடு சிறப்புப் படையைச் சேர்ந்த ஒன்பதாயிரத்து 20 காவலர்கள் உள்பட 97 ஆயிரத்து 882 காவல் அலுவலர்கள், காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் 12 ஆயிரத்து 321 ஊர்க்காவல் படையினர், இரண்டாயிரத்து 870 முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற காவலர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 73 பேர் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 18 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் அலுவலர்கள், காவலர்கள் என அனைவரும் கரோனா தடுப்பு நெறிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பான தகவல்கள், புகார்களைத் தெரிவிக்க பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட, மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைகளைத் தொடர்புகொண்டு விவரங்களை தெரிவிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது