சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 4) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரேசில் நாட்டில் நடைபெற்ற 24ஆவது கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி 2022-ல் பதக்கங்கள் வென்ற ஜெ. ஜெர்லின் அனிகா மற்றும் பிரித்வி சேகர் ஆகியோருக்கு ரூ.1 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை ஊக்கத் தொகையாக வழங்கினார்.
பிரேசில் நாட்டில் 24ஆவது கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி 2022 கடந்த 1.05.2022 முதல் 15.05.2022 வரை நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த ஜெ.ஜெர்லின் அனிகா (18) இறகுப்பந்து போட்டியில் பங்கேற்று ஒற்றையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு மற்றும் குழுப் போட்டி ஆகியவற்றில் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ஆகவே அவருக்கு 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஊக்கத்தொகையாக வழங்கினார்.
ஜெ.ஜெர்லின் அனிகா, மதுரையில் உள்ள அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தின் (மிஷன் இன்டர்நேஷனல் மெடல்கள் திட்டம்) கீழ் ஆண்டொன்றுக்கு ரூ.10 இலட்சம் ரூபாய் நிதியுதவி பெற்றுவரும் விளையாட்டு வீராங்கனை ஆவார்.
அதோபோல இந்தப்போட்டிகளில் ஆடவருக்கான டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்குபெற்ற சென்னையைச் சேர்ந்த பிரித்வி சேகர் (39) இரட்டையர் பிரிவில் 1 வெள்ளிப்பதக்கமும், ஒற்றையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகளில் 2 வெண்கலப்பதக்கமும் என 3 பதக்கங்களை வென்றுள்ளார். அவருக்கு 35 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஊக்கத்தொகையாக முதலமைச்சர் வழங்கினார்.
இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட் போட்டி - சென்னை விமானநிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள்