சென்னை: சென்னையை அடுத்த வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இன்று (ஜூன் 12) அதிகாலை மூன்று ரேஸ் பைக்குகளில் ஆறு நபர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மண்ணிவாக்கம் மேம்பாலம் அருகே அதிவேகமாக சென்று கொண்டிருந்தபோது மேம்பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண்ணின் மீது ஒரு ரேஸ் பைக் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிவேகமாக வந்த பைக் ரேஸ் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், விபத்தை ஏற்படுத்திய நபருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்துள்ளார். மற்ற இரண்டு ரேஸ் பைக்கில் வந்த நபர்கள், விபத்தைக் கண்டதும் அங்கிருந்த அதிவேகமாக தப்பி ஓடி உள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்தில் காயமடைந்த இளைஞரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு உடற்கூராய்வு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் விபத்தில் உயிரிழந்த பெண் சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி சுந்தரவதனம் மனைவியும், ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளருமான செல்வகுமாரி (61) என தெரியவந்தது. செல்வகுமாரி வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூர் காவலர் குடியிருப்பில் தனது நண்பர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அரும்பாக்கம் செல்வதற்காக வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும், பைக் ரேஸில் ஈடுபட்டு விபத்து ஏற்படுத்திய கல்லூரி மாணவர் முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த விஸ்வா எனவும், அவரது கை மற்றும் கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் பின்னர் அமர்ந்து வந்த சரண் என்பவருக்கும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் விடுமுறை நாள்களில் அதிகாலை நேரத்தில் பைக் ரேஸ்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனைத்தடுக்க காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்... பொதுமக்களின் கருத்தை கேட்கும் அறநிலையத்துறை...