தமிழ்நாட்டில் நீண்டகாலமாக பராமரிக்கப்படாத ஏரிகளில் மதகு அமைத்தல், வரத்துக் கால்வாய், கலங்கள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்ய குடிமராமத்துப் பணி என்னும் திட்டத்தின்கீழ் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவருகிறது.
இந்நிலையில் புதியதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த ஆண்டு 15.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 37 பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனைத் தமிழ்நாடு நீர்வளப் பாதுகாப்பு மற்றும் ஏரிகள் சீரமைப்பு மேலாண்மை இயக்குநர் சத்திய கோபால், மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் உடன் கருணாகரச்சேரி, வையாவூர், கருங்குழி ஏரிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வுமேற்கொண்டார்.
திட்ட அளவீட்டின்படி மதகுகள், ஏரிக்கரை அமைக்கப்பட்டுள்ளதா என்பதை அளவீடு செய்து ஆய்வுமேற்கொண்டார் அதன்பின் அப்பகுதி விவசாயிகளிடம் பணிகள் குறித்து நிறை, குறைகளைக் கேட்டறிந்து அதற்குத் தக்க ஆலோசனைகள் வழங்கினார்.
இதன்பின் செய்தியாளரிடம் பேசுகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற ஒருசில பணிகளை இன்று ஆய்வுமேற்கொண்டதாகவும் பணிகள் அனைத்தும் திருப்திகரமாக உள்ளதாகவும், நீர்நிலைகளில் நீர் சேமிப்பு உருவாக்கி விவசாயத்தை மேம்படுத்தவே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
நீர்நிலைகளை விவசாயிகள் உள்ளிட்ட எவரேனும் ஆக்கிரமிப்புச் செய்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இதன்பின் மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் பேசுகையில், சுற்றுலாத் தளமான வேடந்தாங்கலை மேம்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளதாகவும் விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என நம்புவதாகத் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், பொதுப்பணித் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.