புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் கரோனா காரணமாக மூடப்பட்டு, மிகத் தாமதமாகவே மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில், மாமல்லபுரம், வண்டலூர், கோவளம், வேடந்தாங்கல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு காணும் பொங்கல் அன்று பார்வையாளர்கள் வர தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு மட்டும், கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதனைத்தொடர்ந்து, காணும் பொங்கலான இன்று காலை 10 மணி முதலே சரணாலயத்திற்கு பார்வையாளர்கள் வருகை தரத் தொடங்கினர். வருவோர் அனைவரும் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைப் பின்பற்றி வந்தனர். கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது, பார்வையாளர்களின் வருகை இன்று (ஜனவரி 16) மிகவும் குறைந்தே காணப்பட்டது. கடந்த ஆண்டுகளில் எட்டாயிரம், பத்தாயிரம் என வந்திருந்த பார்வையாளர்கள் இன்று மாலை வரை, மிக சொற்ப அளவிலேயே வந்தனர்.
காணும் பொங்கலன்று, மாவட்டத்தின் மற்ற சுற்றுலா தலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வேடந்தாங்கலுக்கு மட்டும் அனுமதி அளித்தது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்த பார்வையாளர்கள், பறவைகளை கண்டுகளித்ததோடு, நீண்ட நாட்கள் கழித்து மக்களை கூட்டமாக ஒரே இடத்தில் சந்தித்தது, மன இறுக்கத்தை தளர்த்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கடுமையான கட்டுப்பாடுகளுடன் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதாகவும், நேரம் ஆகஆக இன்னும் ஏராளமான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் வனச்சரக அலுவலர் சுப்பையா தெரிவித்தார்.
வேடந்தாங்கல் சரணாலய பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி பிரியா, காவல் துணை கண்காணிப்பாளர் கவினா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். மேலும், ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆண்களுக்கு நிகராக இளவட்டக்கல்லை தூக்கி அசத்திய பெண்கள்