செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அருகே உள்ள காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாசன். பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகியாக பதவி வகித்து வரும் இவர், தற்போது வன்னியர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்டத் தலைவராகவும் இருந்து வருகிறார்.
காளிதாசன் இன்று(ஜூன் 12) மறைமலைநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்த போது மூன்று பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து காளிதாசனை சூழ்ந்தது. அங்கிருந்து தப்பியோட முயன்ற காளிதாசனை மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
அதன் பிறகு அருகில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த காளிதாசனை மீட்டு அருகில் உள்ள பொத்தேரி தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காளிதாசனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் காளிதாசை வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ளச்சாராய மரணங்கள்: மேலும் 4 பேரிடம் விசாரணை நடத்த முடிவு!
காளிதாசன் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் மீது கொலை வழக்கு உள்ளதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காளிதாசன் கட்டப் பஞ்சாயத்து ஒன்றுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. கட்டப் பஞ்சாயத்தில் ஏற்பட்ட பகையால் இந்தக் கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளதா? அல்லது வேறு ஏதேனும் முன்பகை காரணமா? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து வந்த காளிதாசனுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் வன்னியர் சங்க செங்கல்பட்டு மாவட்டத் தலைவராக பதவி கிடைத்துள்ளது. இந்நிலையில் பட்டப் பகலில் மறைமலைநகர் பேருந்து நிலையம் அருகே அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பரபரப்பான பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: CMDA: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சிஎம்டிஏவின் புதிய திட்ட விபரங்கள்!