செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், காய்ச்சல் பிரிவு, புதிதாகத் திறக்கப்பட்ட 100 கரோனா தொற்றுப் படுக்கைகள் வார்டு ஆகியவற்றை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் இன்று (ஜூன் 1) ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மா. சுப்பிரமணியம், "செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு 680 படுக்கைகள் உள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவில் 165 படுக்கைகள் உள்ளன. இங்கு இதுவரை படுக்கைகள் தட்டுப்பாடு இல்லை. இந்த மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று குறைந்துவருகின்றது.
ஆக்ஸிஜன் பிளாண்ட் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. இதுவரை 89 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இன்று மாலை அனைத்துத் தடுப்பூசிகளும் போட்டு முடிக்கப்பட்டால், 92 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கும். காலதாமதம் இல்லாமல் ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசுக்குத் தடுப்பூசிகளை உடனே வழங்க வேண்டும்.
செங்கல்பட்டில் வரப்பிரசாதமான ஹெச்.எல்.எல். நிறுவனம் பத்து ஆண்டு காலமாக இயங்காமல் உள்ளது. ஹெச்.எல்.எல். நிறுவனம் தொடர்பாக விரைவில் நல்ல முடிவு வரும். தடுப்பூசி மட்டுமே இந்தப் பேரிடருக்கான தீர்வு. மருத்துவர்கள், செவிலியர் பணியிடங்கள் நிரப்பும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
வரும் 6ஆம் தேதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் தடுப்பூசிக்குப் பற்றாக்குறை இருக்காது. தமிழ்நாட்டில் கறுப்புப் பூஞ்சை தொற்று பாதிப்பு 518 பேருக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்காக, 13 பேர் கொண்டோர் அடங்கிய குழுவை நியமித்து, ஆய்வு மேற்கொண்டுவருகின்றோம். இதுவரை கறுப்புப் பூஞ்சை தொற்றினால் 20 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 18 பேர் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: புனேயிலிருந்து தமிழ்நாட்டிற்கு 4.20 லட்சம் தடுப்பூசி மருந்துகள் வருகை