செங்கல்பட்டு: சென்னை மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் கடந்த ஜூலை 24ஆம் தேதி அம்மணம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், கழுத்து அறுபட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று தினேஷ், அவரது சகோதரி மகன் முரளி, முரளியின் நண்பர்கள் ஆகியோர் சேர்ந்து மது அருந்தியது தெரியவந்தது.
இதனையடுத்து முரளி, அவரது நண்பன் பிரசாந்த் ஆகியோரை பிடித்து காவல் துறையினர் விசாரித்தனர். இந்த விசாரணையில் தினேஷ், சிறுவயதிலிருந்தே தனது மருமகன் முரளிக்கு தவறான வழிகாட்டி, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது. இதனால் முரளி பலமுறை சிறை செல்ல நேர்ந்துள்ளது.
மதுகுடிக்க அழைத்துக் கொலை
மேலும் அவ்வப்போது குடிபோதையில் முரளியின் தாய், மனைவி ஆகியோரையும் தினேஷ் ஆபாசமாகத் திட்டி வந்துள்ளார். இந்நிலையில், ஆத்திரமடைந்த முரளி, தன்னை சிறை செல்ல வைத்து, தனது வாழ்வை பாழாக்கிய தினேஷை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, தினேஷை மது குடிக்க வருமாறு அழைத்து, தன் நண்பர்களுடன் சேர்ந்து அவரது கழுத்தை அறுத்து முரளி கொலை செய்துள்ளார். இந்நிலையில், முரளி உள்ளிட்ட இருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுபோதையில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபர் போக்சோவில் கைது