செங்கல்பட்டு: கல்பாக்கம் அடுத்த பெருமாள் சேரிப்பகுதியில் வசிப்பவர் அம்சா. இவருக்கு மகேஷ்குமார் என்ற மகனும், இரு மகள்களும் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, அம்சாவின் இரு மகள்களில் ஒருவர், தாங்கள் வசிக்கும் ஊரில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், குறிப்பிட்ட சிலர் தங்களை மிரட்டுவதாகவும் கூறி, தங்களைக் காப்பாற்றுமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.
இதன் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட செங்கல்பட்டு மாவட்ட போலீசார், அந்தப்பெண் குறிப்பிட்டிருந்த மூவர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனிடையே, வீடியோ வெளியிட்ட பெண்ணின் அண்ணன் மகேஷ் குமார், கடந்த இரு வருடங்களுக்கு முன் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மூவரில், ஒருவரின் தங்கையை, அப்பெண் மைனராக இருக்கும்போதே ஏமாற்றி காதலித்து, அந்தச் சிறுமி கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது.
சொந்தப் பிரச்சனை
தற்போது வீடியோவை வெளியிட்ட பெண்ணின் குடும்பத்தினர், சிலரின் செல்வாக்கை வைத்து பேசி முடித்ததாகக் கூறப்படுகிறது. திம்மாவரம் பகுதியிலிருந்து பெருமாள் சேரிக்கு குடிபுகுந்து, தற்போது குறிசொல்லும் சாமியாராக வலம் வரும் வடிவேலு என்பவர், இந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு அடைக்கலம் கொடுத்து, அரவணைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவர் மீதும் அந்த ஊரில் பல விமர்சனங்கள் உள்ளன.
இவருக்கும், இந்த ஊரில், இவரது நடத்தை காரணமாக பலத்த எதிர்ப்பு உள்ளது. இந்த நிலையில்தான், போலீசாருக்கு அழுத்தம் கொடுக்கவும், சமூக வலைதளங்களில் கவனத்தை கவர்ந்து, குறிப்பிட்ட மூவர் மீது குற்றச்சாட்டைக் கூறி அப்பெண் வீடியோ வெளியிட்டுள்ளார். முதலமைச்சரின் பெயரைச்சொல்லி வீடியோ வெளியிட்டால் உடனடியாக நடவடிக்கை இருக்கும் என்று சிலர் தூண்டிவிட்டதால் அப்பெண் இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளதாகத் தெரிகிறது.
இதனிடையே, வீடியோ புகழ் பெண்ணின் அண்ணனால் பாதிக்கப்பட்ட, தற்போது வழக்குப்பதியப்பட்ட ஒருவரின் தங்கை கொதித்தெழுந்து, ஆதாரங்களுடன் புகார் அளித்ததால் வீடியோ புகழ் சிறுமியின் அண்ணன் மகேஷ்குமார் சிறை செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.