செங்கல்பட்டு அடுத்த காந்தலூர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த நிலையில், தற்போது இயங்காத காரணத்தினால் பெரிய ராட்சத பள்ளம் உள்ளது.
கல்குவாரி குட்டை உருவானது எப்படி?
சுமார் 1500 அடிக்கும் மேல் உள்ள இப்பள்ளத்தில், கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையின் காரணமாக மழை நீர் கடல் போல் தேங்கியுள்ளது. இந்த கல்குவாரி குட்டை மிகப்பெரிய பரப்பளவில் இருப்பதாலும், தேங்கியிருக்கக்கூடிய நீர் பளிச்சென்று உள்ளதாலும் இந்தக் குட்டை திடீர் சுற்றுலா தளமானது.
உயிரிழப்பு
இந்நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தமீம் அன்சாரி (25), அவரது மாமன் மகள்களான பள்ளி மாணவிகள் சமீதா (17), ஏஞ்சல்(17) ஆகிய மூவரும் இந்தக் கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, நீச்சல் தெரியாததால் மூவரும் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், நீரில் மூழ்கி உயிரிழந்த மூவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குளிக்கத் தடை
இக்கல்குவாரியில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாததால் குளிக்க வரும் பலர் உயிரிழந்து வருவது தொடர் கதையாக உள்ளது. எனவே கல்குவாரி குட்டையில் யாரையும் குளிக்க அனுமதிக்க கூடாது, இப்பகுதியை மாவட்ட நிர்வாகம் தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு