காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடம் (Rajiv Gandhi Memorial) அருகே கார் ஒன்றில் இருந்து மர்ம நபர்களால் வீசப்பட்ட சூட்கேசில், மெட்டல் டிடெக்டர் கருவியை வைத்து சோதனை செய்ததில் எச்சரிக்கை ஒலி எழும்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
1991ஆம் ஆண்டு, மே மாதம் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தனது பிரச்சாரத்தை முடித்து விட்டு, தமிழகத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூருக்கு பிரச்சாரத்திற்காக ராஜீவ்காந்தி வந்திருந்தார். அப்போது, பொதுக்கூட்ட மேடையில் பேசிய ராஜிவ் காந்தி மீது நிகழ்ந்த மனித குண்டு வெடிகுண்டு தாக்குதலில் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்தார். அதன் அடையாளமாக முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அப்பகுதியில் நினைவிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை-பெங்களூர் இடையே தேசிய நெடுஞ்சாலை அருகில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ராஜிவ் காந்தியின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளின் போது காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்டன் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அவ்வழியாக நெடுஞ்சாலையில் இன்று (ஜூன் 13) வேலூர் நோக்கி சென்ற கார் ஒன்று, ராஜீவ் காந்தி நினைவகம் முன்பு நின்றுள்ளது. அதிலிருந்து இறங்கிய சில மர்ம நபர்கள் ஒரு சூட்கேஸை காரிலிருந்து எடுத்து நினைவிடம் முன்பு வீசிவிட்டு உடனே கிளம்பி அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படையினர் மெட்டல் டிடெக்டர் கருவியை வைத்து சோதனை செய்யும் போது, மெட்டல் டிடெக்டர் கருவி எச்சரிக்கை ஒலி எழும்பியுள்ளது. இதனால், அங்கு பணியில் இருந்த சி.ஆர்.பி.எப் (C.R.P.F) போலீசார் பரபரப்பு அடைந்துள்ளனர். உடனடியாக சி.ஆர்.பி.எப் (Central Reserve Police Force - CRPF) போலீசார் ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி சந்திரதாசன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின் தடவியல் துறை நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
மேலும், அந்த மர்ம சூட்கேஸ் அருகே பொதுமக்கள் யாரும் நெருங்காத வகையில் போலீசார் பேரிகார்ட் மூலம் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளனர். தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்த பின்னரே சூட்கேஸில் வெடிகுண்டு ஏதேனும் உள்ளதா அல்லது அது காலி சூட்கேஸ் தானா எனத் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நினைவிடத்தில் கிடந்த இந்த மர்ம சூட்கேஸினால் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Senthil Balaji ED Raid: செந்தில் பாலாஜி அக்கவுண்ட்டில் என்ன இருக்கு? - விசாரணையில் இணைந்த ஸ்டேட் வங்கி