செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு அக்.9 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை ஒன்றியம், முடிச்சூர் ஊராட்சியிலுள்ள 12 வார்டுகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது.
வாக்குவாதம்
அங்குள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த நபர் ஒருவர் செல்ஃபோன் பேசிக்கொண்டு வாக்களிக்க வந்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி செல்ஃபோன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
வாக்களிக்க வந்த நபரை காவலர் ஒருவர் தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் வாக்களிக்க வந்த நபருக்கும், காவலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சக காவல் துறையினர் அந்த நபரை சமாதானப்படுத்தி , செல்ஃபோனைப் பெற்றுக்கொண்டு வாக்களிக்க அனுப்பி வைத்துள்ளனர்.
மழை பெய்ததால் வாக்காளர்கள் அவதி
மதிய வேளையில் அந்த பகுதியில் மழை பெய்ததால் வாக்களிக்க வந்தவர்கள் வாக்களிக்க முடியாமல் அவதியடைந்தனர். வாக்குச்சாவடி மையத்தில் மழைநீர் சூழ்ந்ததால் அலுவலர்கள் பலகை அமைத்து வாக்களிக்க ஏற்பாடு செய்தனர்.
முடிச்சூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடும் பட்டதாரி பெண் சிந்துலேகா பொது மக்களோடு வரிசையில் நின்று வாக்களித்தார். 95 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நடந்து வந்து மகிழ்ச்சியுடன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
மதியம் 2 மணி வரை குறைந்த அளவு வாக்குகள் பதிவான நிலையில், மாலை 4 மணிக்கு மேல் வாக்களிக்க அதிகளவு பொதுமக்கள் குவிந்தனர்.
சில வாக்குசாவடி மையங்களில் கூட்டம் அதிகமானதால் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் வாக்களிக்க வரிசையில் நின்றனர்.
இதையும் படிங்க: தேவரியம்பக்கம் வாக்குச்சாவடி வளாகத்தில் தேங்கி நின்ற மழை நீர் - வாக்களிக்கும் விழுக்காடு குறைய வாய்ப்பு