செங்கல்பட்டு: தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட குரோம்பேட்டை அலுவலகத்தில் திருப்பெரும்புதூர் மக்களவை உறுப்பினரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர். பாலு தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நலச் சங்கங்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார்.
கிடப்பில் உள்ள நீட் விலக்கு தீர்மானம்
அப்போது செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய டி.ஆர். பாலு, "தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றின.
அந்தத் தீர்மானத்தைச் சட்ட ஒப்புதலுக்கு அனுப்பாமல் தமிழ்நாடு ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். மேலும், இது குறித்து பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கும், நாடாளுமன்றத்தில் எடுத்துக் கூறியும் நடவடிக்கை இல்லை.
குடியரசுத் தலைவரைச் சந்தித்து பேச்சுவார்த்தை
அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்குத் தகவலளிப்பட்ட நிலையில், திமுக சார்பில் அனைத்துக் கட்சிகளின் எம்பிக்கள் குடியரசுத் தலைவரைச் சந்திப்பதற்காக, மாலை டெல்லி செல்லவுள்ளோம்" எனக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் இ. கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்று நலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், வியாபாரி சங்கத்தினரிடமிருந்து மனுக்களைப் பெற்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 4 பெரிய திட்டங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கைவிட முடிவு?