செங்கல்பட்டு: ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நேற்று (அக். 22) ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்றது. இதற்காக அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த வகையில், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மதுராந்தகம் காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் உள்ளிட்ட அலுவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டம் முழுவதும் பார்வையிட்டு வந்த செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், மதுராந்தகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட நேற்று (அக். 22) மாலை வருகை தந்தார்.
நெகிழ்ச்சியை ஏற்படுத்திய காணொலி
அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளரை வரவேற்க வேகமாக ஓடி வந்த காவல் ஆய்வாளர் ருக்மாங்கதனின் காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இதனால் வலியால் துடித்த ருக்மாங்கதன், கால்களைப் பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டார்.
இதைக் கவனித்த காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், உடனடியாக சென்று ருக்மாங்கதனின் கால்களைப் பிடித்து சிகிச்சை மேற்கொள்ள ஆரம்பித்தார். பின்னர் காவல்துறை வாகனத்தை வரவழைத்து ஆய்வாளரை பத்திரமாக அனுப்பி வைத்தார்.
காவல் ஆய்வாளருக்கு காலில் தசை பிடிப்பு ஏற்பட்டவுடன், தானொரு காவல் கண்காணிப்பாளர், அதுவும் ஐ.பி.எஸ் அலுவலர் என்பதையும் மனதில் கொள்ளாமல், ஆய்வாளருக்கு சிகிச்சையளித்த கண்காணிப்பாளரின் செயல் அனைத்து தரப்பினரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.