கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், செம்பாக்கம் நகராட்சியில் 6 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, ஏற்கனவே அந்தத் தெருவை சுற்றி, 10 இடங்களில் தடுப்புகளை வைத்து இரவு பகலாக காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ள செம்பாக்கம், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய நகரங்களில் வசிக்கும் பிறருக்கும் தொற்றுப் பரவாமல் தடுக்கவும், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தாம்பரம் அடுத்த செம்பாக்கம் நகராட்சி பகுதியில் வருவாய், உள்ளாட்சி, சுகாதாரம், காவல் துறை உள்ளிட்ட பல்வேறுத் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்குத் தேவையான மளிகை பொருள்களும், இரண்டு முறை காய்கறிகளும் வந்து சேரும் விதமாக நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம். இருவழிச் சாலையாக இருந்த கிழக்கு தாம்பரம் வேளச்சேரி சாலையை ஒருவழிச் சாலையாக காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து வாகனங்களைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: சித்திரைத் திருவிழா நடத்துவது குறித்து ஏப்.14 க்குப் பிறகு முடிவு!