செங்கல்பட்டு: பையனூர் பகுதியில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் சுமார் 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஃபிலிம் சிட்டி கட்டப்பட்டு வருகிறது. இதனை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் நேற்று சென்று பார்வையிட்டார்.
இங்கு அரசு சார்பில் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த வளாகத்துக்கு சாலை வசதி அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டது. சாலை அமைக்க சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மொத்த செலவான ஒரு கோடி ரூபாயில், 3 இல் 1 பங்குத் தொகையான 35 லட்சம் ரூபாயை, காசோலையாக தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.கே.செல்வமணி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று வழங்கினார்.
காசோலை வழங்கும் போது கூட்டமைப்பு நிர்வாகிகள் செல்வமணியுடன் இருந்தனர். புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஃபிலிம் சிட்டியில் ஐம்பது சதவீதப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படப்பிடிப்பு நடந்து முடிந்திருப்பதும், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜயின் லியோ படப்பிடிப்பு நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தாம்பரத்தில் திணை, சித்த மூலிகை தாவர கண்காட்சி: மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்!