செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேவுள்ள புளியரணங்கோட்டை கிராமத்தில் நியாய விலைக் கடை ஒன்று இயங்கி வருகிறது.
சுமார், 35 வருடங்களாக நியாய விலைக் கடைக்கு அரசு கட்டடம் இல்லாமல் தனியாருக்குச் சொந்தமான பாழடைந்த கட்டடத்திலேயே கடை இயங்கி வருகிறது.
இந்தக் கடையால் பயன்பெறும், 250க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், ஒவ்வொரு முறை இந்தக் கடைக்கு சென்று வரும்பொதெல்லாம் பயத்துடன் சென்றுவரும் நிலை ஏற்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையிலுள்ள இக்கட்டத்தில், எலிகள் புகுந்து அங்குள்ள பொருள்களை நாசம் செய்து வருகின்றது.
மேலும், பலத்த மழை பெய்தால், உட்புகும் நீராலும் அரிசி உள்ளிட்ட பொருள்கள் வீணாக வாய்ப்புள்ளது. இது குறித்து பல முறை அலுவலர்களிடம் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியும் எந்த முன்னேற்றமும் கிடையாது என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
அங்குள்ள அரசு இ-சேவை மையத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும், அலுவலர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதாகக் கூறுகின்றனர்.
ஒரு கிராமத்தில், 35 வருடங்களாக இயங்கும் நியாய விலைக் கட்டடத்திற்கு, அரசு கட்டடம் கட்டித் தராதது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கிராம மக்களின் அடிப்படைத் தேவைக்கான இந்த சிறு கோரிக்கையைக் கூட கண்டுகொள்ள மனமில்லாமல் இருக்கும் அரசு இயந்திரம், எப்போது கண் விழிக்கும் என்பதே அப்பகுதி மக்களின் கேள்வியாகவுள்ளது.
இதையும் படிங்க: ரேஷன் கடை ஊழியரிடம் இருந்து ரூ.5 லட்சம் வழிப்பறி!