செங்கல்பட்டு: வேம்பாக்கம் ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் குமாரசாமி (56). இவர் நந்தனம் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி ஜெயவாணி( 36) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி சிந்தாரிப்பேட்டையில் வசித்து வந்த ஜெயவாணியின் தந்தை ஜெயக்குமார் உடல் நலக்குறைவால் காலமானதால் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க ஜெயவாணி தனது குடும்பத்துடன் சென்றுள்ளார்.
பின்னர் ஜெயவாணி எழும்பூர், ஆங்கிலோ இந்தியன் சாலை, தீயணைப்பு அலுவலர் குடியிருப்பில் வசிக்கும் தனது அக்கா வீட்டிற்குச் சென்று குடும்பத்துடன் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி ஜெயவாணி எழும்பூர் ஆங்கிலோ இந்தியன் சாலையில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பிளேடால் ஜெயவான் அறுத்து விட்டு தப்பி சென்றார். பின்னர் பாதிக்கப்பட்ட ஜெயவாணி இது குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஜெயவாணியிடம் காண்பித்து பிளேடால் அறுத்து தப்பி சென்ற நபரின் அடையாளம் குறித்து விசாரணை நடத்தினர். அந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்த ஜெயவாணியின் குடும்பத்தினர் தப்பி சென்ற நபரின் நடை, உடை பாவனையை வைத்து ஜெயவாணியின் கணவர் குமாரசாமி போல் இருப்பதாகச் சந்தேகத்துடன் தெரிவித்துள்ளனர். உடனே போலீசார் ஜெயவாணியின் கணவர் குமாரசாமியைப் பிடித்து விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கல்லூரி பேராசிரியரான குமாரசாமியிடம் ஜெயவாணி டியூஷன் படிக்க வந்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இருவருக்கும் அதிக வயசு வித்தியாசம் இருந்ததால் ஜெயவாணியின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 2011 ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் குமாரசாமி தனது மனைவி ஜெயவாணியை எம்.எஸ்.சி நர்சரிங் படிக்க வைத்துள்ளார்.
படிப்பை முடித்த பின்னர் ஜெயவாணி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பயிற்சியாளராக பணிக்கு சேர்ந்து வேலை பார்த்து வருவது தெரியவந்தது. பின்னர் ஜெயவாணியின் நடவடிக்கையில் மாற்றம் தெரியவரவே குமாரசாமிக்கு அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் சமீபகாலமாக ஜெயவாணி தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டே இருப்பதும், அடிக்கடி செங்கல்பட்டிலிருந்து சிந்தாரிப்பேட்டைக்கு வந்து தங்குவதுமாக இருந்ததால் குமாரசாமிக்கு அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது.
ஒரு கட்டத்தில் தகராறு முற்றி ஜெயவாணி தான் படிக்கும் போது ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவருடன் சென்று விடுவேன் எனக் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குமாரசாமி, எங்கே வயதான காலத்தில் தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாரோ என்ற அச்சத்தில் சம்பவத்தன்று தனது தலையில் விக் வாங்கி அணிந்து கொண்டு மாறுவேடத்தில் சென்று மனைவி ஜெயவாணியை பிளேடால் அறுத்து விட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் பேராசிரியர் குமாரசாமி மீது பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குமாரசாமியைப் புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நியாயமாக நடத்தப்படும்: தேர்தல் ஆணையம் உறுதி