செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றத்திலுள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் பாண்டியராஜன், மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கி உரையாடினார். அப்போது அவர் கூறுகையில், செங்கல்பட்டு மாவட்டத்தினைச் சுற்றியுள்ள மொத்தம் 36 ஊராட்சிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் என மொத்தம் 5,704 பேருக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி பழங்குடியினர் மற்றும் இருளர் பகுதி மக்களுக்கு, அம்மா வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டுவதற்கான அரசாணையும் வழங்கப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “மாமல்லபுரத்தில் அதிகப்படியான சிற்பக்கலை கலைஞர்கள் உள்ளார்கள். அவர்களுக்குத் தேவையான பொருள்களை விற்கும் பொருளாதாரச் சந்தையை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் செல்லுமிடமெல்லாம் தேய்ந்த கிராமபோன்போல் பேசிக்கொண்டுவருகிறார். அவர் செல்லும் ஊரின் பெயர்கூட அறியாமல், குத்துமதிப்பாகப் பேசிவருகிறார். ஒருநாள் அவர் கையில் இருக்கும் துண்டுச் சீட்டில் உள்ள கேள்விகள் மட்டுமே அவர் அறிந்தது. ஊராட்சியில் உள்ள மக்களின் பிரச்சினைகளை ஒருபோதும் ஸ்டாலின் கேட்டு அறிந்ததில்லை.
எனவே முதலில் செல்லும் இடத்தின் ஊரின் பெயரைத் தெரிந்துகொண்டு பிறகு பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்குத் தகுந்த பதில்களை மட்டும் அளிக்க வேண்டும்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.