செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நெம்மெலி சூளேரிகாடு பகுதியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, சிறு குறு நடுத்தர துறை அமைச்சர் அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆகியோர் நேற்று (ஜனவரி 19) ஆய்வு மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என். நேரு, “இரண்டாவது கட்ட கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் 2019 ஆம் ஆண்டு 1,259 கோடி மதிப்பில் ஜெர்மன் நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் 700 கோடி ரூபாய் ஜெர்மன் நாடு உதவியுள்ளது.
இந்த கடல் நீர் குடிநீராக்கும் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 15 மில்லியன் லிட்டர் தண்ணீர் உற்பத்தியாகி வருகிறது. இந்த பகுதியில் உற்பத்தியாகும் குடிநீரை சென்னை, பல்லாவரம், குரோம்பேட்டை, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதியில் சுமார் 9 லட்சம் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதே பகுதியில் ஏற்கனவே உள்ள கடல் நீர் குடிநீராக்கும் நிலையம் 2009 ஆம் ஆண்டு அப்போதைய துணை முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலினால், 1,000 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது. அந்த குடிநீர் நிலையத்தில் தினசரி 10 கோடி லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்து சென்னை வேளச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பொதுமக்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கடல் நீரை குடிநீராக்கும் இரண்டாவது திட்டத்தின் பணிகள் நிறைவு பெற்று வருகின்றன. குழாய் பதிக்கும் பணி 45 கிலோமீட்டர் தூரம் 96 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றது. இன்னும் நான்கு சதவீத பணிகள் மட்டுமே மீதம் உள்ளது. அதுவும் விரைவில் நிறைவடையும். வரும் ஜூலை மாதம் இறுதியில் இந்த பணிகள் நிறைவு பெற்று, குடிநீர் மக்கள் பயன்பாட்டிற்கு விநியோகிக்கப்படும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், “கடல் நீரை குடிநீராக்கு திட்டத்தில் மூன்றாவது குடிநீர் உற்பத்தி நிலையம் விரைவில் தொடங்கப்படும். இந்தியாவிலேயே இதுதான் மிகப்பெரிய கடல்நீர் குடிநீராக்கும் திட்டம். 400 எம்.எல்.டி திட்டம் விரைவில் தொடங்க உள்ளது” என்று தெரிவித்தார்.