செங்கல்பட்டு: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடமாகும். ஆண்டுதோறும் அக்டோபர்-நவம்பர் மாதங்கள் தொடங்கி ஜனவரி-மார்ச் வரையில் பல நாடுகளில் இருந்து பல வகையான பறவைகள் இங்கு வந்து தங்கி இனவிருத்தி செய்து மீண்டும் சொந்த நாடுகளுக்குத் திரும்புவது வழக்கம்.
இந்த சரணாலயம் அமைந்துள்ள ஏரியின் ஆழம் ஏறத்தாழ 17 அடிகள். இப்போது 12 அடிகள் வரை தண்ணீர் உள்ளது. ஆண்டுதோறும் சீசனில் வேடந்தாங்கல் ஏரிக்கு குறைந்தது 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை பறவைகள் வருவது வழக்கம். கடந்தாண்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்து சென்றன.
இந்த பறவைகளை கண்டுகளிக்கவும், பொழுதுபோக்கவும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவதும் வழக்கமான ஒன்று. ஆனால் இந்த ஆண்டு தற்போது வரை 15 ஆயிரம் பறவைகள் மட்டுமே வருகை தந்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணிக்காக நீர் தேக்கி வைக்கப்படாமல், முற்றிலும் வறண்டு காணப்படுவதே ஆகும்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பதோடு வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வரும் பறவைகளுக்கான உணவு ஆதாரமாகவும் இருந்து வருகிறது. தற்போது இந்த ஏரியில் நீர் தேக்கி வைக்கப்படாமல் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டு வருவதால் நீரின்றி காணப்படுகிறது.
இதனால் போதிய உணவு பறவைகளுக்கு கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே சரணாலயத்திற்கு மிக சொற்ப அளவில் பறவைகள் வந்துள்ளன என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள். குறைந்த அளவிலான பறவைகள் மட்டுமே காணப்படுவதால் பார்வையாளர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி அருகே கி.பி. 12ஆம் நூற்றாண்டு கால மூத்ததேவி சிலை கண்டெடுப்பு