காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து அண்மையில் பிரித்து உருவாக்கப்பட்டது செங்கல்பட்டு மாவட்டம். இதனைத் தொடர்ந்து, அதன் எல்லையும் மாற்றியமைக்கப்பட்டது. அதன் எல்லைக்குள் புகழ்பெற்ற மேல்மருவத்தூர் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியும் இணைக்கப்பட்டது.
மேல்மருவத்தூரில் காவல் நிலையம் ஒன்று இயங்கிவருகிறது. அங்கு காவல்துறை ஆய்வாளராக தமிழ்வாணன் என்பவர் பணியாற்றிவருகிறார். உடல்நிலை காரணமாக, அவர் நீண்ட நாள் விடுப்பிலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது.
மருவத்தூர் மட்டுமல்லாது, சித்தாமூர் காவல் நிலையமும், இந்த ஆய்வாளரின் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளது. இதனால், காவல்துறை பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. அத்துடன் அன்றாட பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்கு வருபவர்கள் காலையிலிருந்து மாலை வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தற்போது, இந்த காவல் நிலையங்களை அச்சிறுப்பாக்கம் ஆய்வாளர் சரவணன் கூடுதலாக கவனிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அச்சிறுப்பாக்கம், ஒரத்தி, மருவத்தூர், சித்தாமூர் ஆகிய நான்கு காவல் நிலையங்களுக்கும் ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ளதாகவும் அறியமுடிகிறது. ஒரு ஆய்வாளரே இனி அனைத்து காவல் நிலையங்களையும் கவனிக்க வேண்டுமென்பதால், பணிச் சுமை கூடும் என்றும் இதனால் அனைத்து காவல் நிலைய பணிகளும் பாதிக்கப்படலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உடனடியாக, புதிய ஆய்வாளர் நியமனம் செய்து, பணிகளை விரைவுபடுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : 2021 சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அறிவிப்பு!