செங்கல்பட்டு: வண்டலூர் அடுத்த கொளப்பக்கம் பகுதியைச் சேர்ந்த சாம்சங்தினகரன் (63) சென்னையில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தில் டைம் கீப்பராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி ஆலிஸ், மகன் இம்மானுவேல், மகள் பெனிட்டா ஆகியோர் கூடுவாஞ்சேரியில் தனியாக வசிக்கின்றனர்.
இரண்டாவது மனைவி ஜெனட்டுடன் சாம்சங் தினகரன் கொளப்பக்கத்தில் வசித்து வருகின்றார். இரண்டாவது மனைவிக்கு குழந்தைகள் இல்லை.
போன் எடுக்காததால் சந்தேகம்
இந்தநிலையில் நேற்று (ஜூலை.17) மாலை முதல் மனைவியின் மகள் பெனிட்டா சாம்சங் தினகரனுக்கு போனில் தொடர்பு கொண்டுள்ளார்.
வெகு நேரமாகியும் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவரது மகள் பக்கத்து வீட்டுக்காரருக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அப்போது பின்பக்கக் கதவு திறந்த நிலையில் கார் இருந்துள்ளது. ஆனால் வீட்டில் யாரும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதில் பயந்துபோன அவரது மகள், மகன், முதல் மனைவி ஆகியோர் விரைந்து சென்றுள்ளனர். இரண்டு வீடுகளிலும் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லை என்பது தெரிந்தது.
இருவர் கொலை
இதுகுறித்து ஓட்டேரி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து தகவலறிந்து அங்கு வந்த ஆய்வாளர் அசோகன் மற்றும் தனிப்படையினர் சோதனையில் ஈடுபட்ட நிலையில், சந்தேகம் வலுக்கவே காவல் துறையினர் எஸ்பிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு வந்த செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி விஜயகுமார், வண்டலூர் டிஎஸ்பி அனுமந்தன் ஆகியோர் அக்கம்பக்கத்தினர், சாம்சங் தினகரனின் உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்தனர்.
மற்றொரு வீட்டில் பூட்டியிருந்த அறையை சோதனை செய்தனர். அப்போது வீட்டின் தரைத்தளத்தில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் ஜெனிட்டா கைகள் கட்டப்பட்ட நிலையிலும், சாம்சங் தினகரன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும் உயிரிழந்து கிடந்துள்ளனர்.
தொடர்ந்து, அங்கு வந்த மறைமலைநகர் தீயணைப்புத் துறையினர் உயிரிழந்தவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஓட்டேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளியை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆவின் முறைகேடு - 34 பொது மேலாளர்கள் பணியிட மாற்றம்