செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் நடத்திவரும் தொழிலதிபர் ராம் பிரகாஷுக்கும், பாண்டிச்சேரி போத்தீஸ் நிறுவன உரிமையாளர் சந்தானம் ஆகிய இருவருக்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் போட்டி ஏற்பட்டு, பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை இருந்துள்ளது.
இதன் காரணமாக மதுராந்தகத்தில் உள்ள ராம்பிரகாஷ் வீட்டிற்கு 20-க்கும் மேற்பட்ட குண்டர்களுடன் வந்த சந்தானம் வீட்டிலிருந்த ராம்பிரகாஷை கடத்த முயன்றபோது அதைத் தடுக்கவந்த அவரது அண்ணன் மகன் கௌதமை கடத்திச் சென்றனர். மேலும் அவரிடமிருந்த 2 ஐ போன்களையும் பறித்துச் சென்றுவிட்டனர்.
இது குறித்து ராம்பிரகாஷ் உடனடியாக மதுராந்தகம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, காவல் துறையினர் கௌதம் வைத்திருந்த கைப்பேசி மூலம் தொடர்புகொண்டு அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபாட்டிருந்தபோது, கௌதமிடமிருந்த 1.25 லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அச்சிறுப்பாக்கம் என்ற இடத்தில் கௌதமை இறக்கிவிட்டு கடத்தல்காரர்கள் காரில் தப்பிச் சென்றனர்.
காவல் துறையினர் ராம்பிரகாஷிடம் நடத்திய விசாரணையில் சந்தானத்திற்கும் ராம்பிரகாஷுக்கும் இதையே கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்ததாகவும், ராம்பிரகாஷுக்கு சொந்தமாக திண்டிவனத்திலிருந்த வீட்டுமனையை சந்தானம் வாங்கிக் கொள்வதாக இருந்ததாகவும், இதனுடைய பத்திரப்பதிவு நேற்று நடப்பதாக இருந்தது.
ஆனால் நேற்று பத்திரப்பதிவு ஆகாததால் ஆத்திரமடைந்த சந்தானம் ராம்பிரகாஷ் வீட்டிற்கே வந்து பணம் கேட்டு மிரட்டியதாகவும் இதற்கிடையே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்போதே ராம்பிரகாஷை கடத்த முயன்றபோது அதைத் தடுக்கவந்த கௌதமனை கடத்தியதாக விசாரணையில் தெரியவருகிறது. இது குறித்து மதுராந்தகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.