சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் தனது மனைவி இந்திராணி, உறவினர்கள் மகாலட்சுமி, சாந்தி ஆகியோருடன் மேல்மலையனூர் கோயிலுக்கு காரில் சென்றுவிட்டு இன்று (பிப். 9) அதிகாலை சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அத்திமனம் என்ற இடத்தில், முன்னால் சென்ற லாரியின் மீது கார் மோதியது.
இதில், கார் சுக்குநூறாக நொறுங்கியது. காரில் பயணித்த சுப்பிரமணி, இந்திராணி, மகாலட்சுமி, சாந்தி, கார் ஓட்டுநர் ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த படாளம் காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர்.
பொதுவாகவே செங்கல்பட்டு முதல், தொழுப்பேடு வரையிலான சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கவனக்குறைவால் விபத்துகள் ஏற்படுவது அதிகரித்துவருகிறது.
இதனைத் தவிர்க்கும்விதமாக, நள்ளிரவு முதல் அதிகாலை வரை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே ஸ்பீக்கர்களைப் பொருத்தி ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கைவிடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
மேலும், இந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் அதிவேகமாக வரும் வாகனங்களைக் கண்காணித்து உடனடியாக அவர்களைத் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: உ.பி.யில் சாலை விபத்து: 6 பேர் உயிரிழப்பு