மீன்களின் வளர்ச்சிக்காக மீன்பிடித் தடைக்காலம் நேற்று (ஏப்ரல் 15) முதல் 61 நாள்களுக்கு அமலுக்கு வருவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் குப்பம், உயாலிகுப்பம், கடலோர மீனவ கிராமங்கள், மாமல்லபுரம் மீனவர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது படகுகள், வலைகளை மேடான இடங்களில் பாதுகாத்துவருகின்றனர்.
இந்த 68 நாள்களுக்கு மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்களின் தொழிலான மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை இன்னும் முடிவடையாத நிலையில் மீன்பிடித் தொழில் ஒன்றே குலத்தொழிலாகச் செய்துவரும் மீனவர்கள் வருமானத்திற்காக மாற்று வேலைக்குச் செல்ல முடியாமலும் அவதிப்படுகின்றனர்.
அரசால் தடைக்கால நிவாரண நிதியாக ஐந்தாயிரம் வழங்கப்பட்டுவருகிறது. ஆனால் ஐந்தாயிரம் என்பது 68 நாள்களுக்கு ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற போதுமானதாக இருக்காது என்று அதனை உயர்த்தி 10,000 ரூபாயாக வழங்க வேண்டும் என்று மீனவர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைவைத்துள்ளனர்.