செங்கல்பட்டு மாவட்டம், கொண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராஜகோபால் (வயது 49). 10 நாள்களுக்கு முன்பு ராஜகோபாலின் நிலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் அறுவடை இயந்திரம் மூலம் நெல்பயிரை அறுவடை செய்துள்ளார். இதில் பெருமாளுக்கு அறுவடைக் கூலியாக ராஜகோபால் தர வேண்டிய 3,500 ரூபாயைத் தர தாமதித்து வந்ததால், இருவருக்கும் இடையே கடந்த சில நாள்களாக மோதல் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று (அக்.11) காலை ராஜகோபாலின் வீட்டுக்கு வந்த பெருமாள், ”இன்றைக்குள் பணம் தரவில்லையென்றால் உன்னுடைய ட்ரில்லர் இயந்திரத்தை தூக்கி விடுவேன்” என மிரட்டல் தொனியில் பேசிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று முதல் வயலில் இருந்த தனது ட்ரில்லர் இயந்திரத்தை எடுப்பதற்காக ராஜகோபால் வயலுக்குச் சென்றுள்ளார்.
ஆனால் அவருக்கு முன்னதாகவே அங்கு சென்று, ட்ரில்லர் இயந்திரத்தை பெருமாள் தனது ட்ராக்டர் மூலம் எடுத்துச் செல்வதைக் கண்ட ராஜகோபால், தனது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று பெருமாளிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போய் ஆத்திரமடைந்த பெருமாள், ராஜகோபாலைக் கீழே தள்ளி அவர் மீது தனது ட்ராக்டரை ஏற்றிக் கொலை செய்துள்ளார்.
இதில் ராஜகோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து மறைமலைநகர் காவல் நிலையத்திற்குச் சென்று பெருமாள் சரணடைந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், ராஜகோபாலின் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சரணடைந்த பெருமாள் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : முறைகேடாக பூக்கள் கடத்தல் - விமான நிலையத்தில் சிபிஐ ரெய்டு!