செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம், கோவளம் கடற்கரை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதன் எதிரொலியாகவும், தூய்மையான, பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கடற்கரையாகவும் மாற்ற ஒன்றிய அரசு சார்பில் கோவளம் கடற்கரையை புளூ பீச்சாக அமைக்க முடிவு செய்தது.
புளூ பீச் திட்டப்பணிகள்
ஆனால், அப்பகுதி மீனவமக்கள் இத்திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என கருதி எதிர்ப்பு தெரிவித்தனர். பின், செங்கல்பட்டு கோட்டாட்சியர் தலைமையில் மீனவ மக்களிடம் இத்திட்டம் குறித்து கூறப்பட்ட பின், ரூ. 6.17 கோடி மதிப்பில் பணி தொடங்கப்பட்டது.
இதற்கிடையில், புளூ பீச் அமைப்பதற்கான திட்டப்பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. தற்போதுவரை உள் வளாக நடைபாதை, சோலார் பவர் பேனல் வசதியுடன் மின்வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, அமரும் மேஜைகள், சிசிடிவி கேமரா, பிளாஸ்டிக் அறுவை இயந்திரம், கட்டுப்பாட்டு அறை, கழிப்பறை, முதல் உதவி மையம், சுற்றுப்புற வளாக தடுப்பு என உள்கட்டமைப்பு பணிகள் முடிந்துள்ளன.
உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு
இந்நிலையில், இப்பணிகளை புதிதாக பொறுப்பேற்றுள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார். அங்கு இதுவரை செய்துள்ள திட்டப்பணிகள் மேற்கொண்டு செய்யவுள்ள பணிகள், நிதி ஒதுக்கீடு போன்ற அனைத்து விவரங்களையும் கேட்டறிந்தார்.
புளூ பீச் வளாகத்தின் அருகே உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அமையும் விதமாக மகளிர் சிறு தொழில் அமைக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திதர கருத்துரை தெரிவித்தார். ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராமன் உள்பட பலர் உடனிருந்தனர்.