செங்கல்பட்டு: பழமத்தூர் பகுதியில் இருக்கும் ஆற்றுத் திட்டில் வழக்கமாக மாடுகள் மேய்ந்து வரும். கடந்த சில நாள்களுக்கு முன்னதாக, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களின் முப்பதுக்கும் மேற்பட்ட மாடுகள் அங்கு மேய்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு பெய்து வந்த கனமழையால், பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால், இந்த மாடுகள் குறிப்பிட்ட ஆற்றின் நடுவில் மாட்டிக்கொண்டு வெளிவர முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றன. இதனை உணர்ந்த மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அலுவலர்களிடம் முறையிட்டனர்.
இதனையடுத்து, அரக்கோணம் பகுதியில் இருந்து தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் (National Disaster Response Force) வரவழைக்கப்பட்டனர். ஆனாலும், மீட்புக் குழுவினரிடம் உள்ள ரப்பர் படகுகளைக் கொண்டு, 30-க்கும் மேற்பட்ட மாடுகளை மீட்க முடியாமல் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் தவித்து வருகின்றனர்.
அந்த மாடுகளுக்கு தற்போது வரை உணவளித்து கவனித்து வருகின்றனர். ரப்பர் படகுகள் மூலம் மாடுகளை மீட்க முயன்றால், படகுகள் கவிழும் அபாயம் உள்ளது. மேலும், மாடுகளின் கொம்புகள் பட்டு ரப்பர் படகுகள் சேதம் ஆகவும் வாய்ப்பு உள்ளதால், என்ன செய்வது என்று தெரியாமல் அனைத்துத் தரப்பினரும் பரிதவிப்பில் உள்ளனர்.
எப்படி மீட்கலாம்?
20-க்கும் மேற்பட்ட காலி தார் பீப்பாய்களை வாங்கி, அவற்றை கயிறு மூலமாக இறுக பிணைக்கலாம். அவற்றின்மேல் பலகைகளைப் பொருத்தினால், அது நீரில் மிதக்கும் படகாக மாறும்.
மாட்டின் உரிமையாளர்களை அழைத்துச்சென்று, மேற்குறிப்பிட்ட வகையில் உருவாக்கப்பட்ட பீப்பாய் படகின் மேல், மாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி கயிற்றின் மூலம் ரப்பர் படகுகளில் இணைத்து கரைக்கு இழுத்து வந்து மீட்கலாம்.
இதையும் படிங்க: VIRAL VIDEO: ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தில் ஸ்கூட்டி ஓட்டியவர் மீட்பு!