செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றத்தில் கரோனா தொற்று இரண்டாம் கட்ட நிவாரண நிதியாக ரூபாய் இரண்டாயிரம், 14 மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பினை ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பயனாளிகளுக்கு வழங்கினார்.
அப்போது அமைச்சர் கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 36 ஆயிரத்து 773 நியாயவிலைக்கடை மூலமாக, 2 கோடியே 9 லட்சத்து 59 ஆயிரத்து 349 குடும்ப அட்டைதாரர்களுக்கு, 4 ஆயிரத்து 192 கோடி ரூபாய் நிதியாக வழங்கப்பட உள்ளது.
இதில் முதல் கட்ட தவணையாக 4 ஆயிரத்து 192 கோடி ரூபாய் வாங்கப்பட்ட நிலையில், மொத்தமாக 8 ஆயிரத்தி 386 கோடி ரூபாய் நிதியாக வழங்கப்பட்டது. இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 1,077 நியாய விலை கடை மூலம் 6 லட்சத்து 64 ஆயிரத்து 153 குடும்ப அட்டைதாரர்களுக்கு, 132 கோடியே 83 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் நிதியாக வழங்கப்படுகிறது.
கடந்த மாதம் வழங்கப்பட்ட முதல் தவணை என்பது 132 கோடியே 83 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் சேர்த்து மொத்தமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 265 கோடியே 66 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்று அறிவித்த திட்டங்களை உடனடியாக செயல்படுத்தும் அரசாக திமுக தலைமையிலான அரசு அமைந்துள்ளது. இன்னும் பல திட்டங்கள் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும்" எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி செல்வம், செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர் வரலட்சுமி மதுசூதன், திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், திருப்போரூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இதய வர்மன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 30 ஆண்டுகளுக்கு பிறகு ராமநாதபுரத்தில் 2ஆம் போக சாகுபடி!