காஞ்சிபுரம்: 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படுவது, காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயில். தற்போது இந்த கோயில் அத்திவரதர் கோயில் என உலகமெங்கும் பிரசித்தி பெற்றுள்ளது. ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தில் நடைபெறும் பார்வேட்டைத் திருவிழாவில், வரதராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
அந்த வகையில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து இந்த மாட்டுப் பொங்கல் அன்று புறப்பட்ட வரதராஜப் பெருமாள், முத்தியால்பேட்டை, அய்யன்பேட்டை, கருக்குப் பேட்டை, திம்மராஜம்பேட்டை, கீழ் ஒட்டிவாக்கம், வெண்குடி, வாலாஜாபாத், புளியம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக மண்டகப்படி கண்டருளி, பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார்.
தேவராஜ சுவாமி பார்வேட்டைக்கு வரும்போது அர்ச்சகர்களின் இரு பிரிவினரான வடகலை, தென்கலையைச் சார்ந்தவர்கள் திவ்யப் பிரபந்தம் பாடி வருவது வழக்கமாக இருந்து வருகிறது. திவ்ய பிரபந்தம் யார் முதலில் பாடுவது என்ற பிரச்னை வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்கு இடையே பல ஆண்டுகளாக தொடர்கதையாக இருந்துள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகள் பல ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளன. சென்னை உயர் நீதிமன்றம் தற்காலிகமாக இருபிரிவினர்களும் இக்கோயிலில் திவ்ய பிரபந்தம் பாட தடை விதித்துள்ளது. எனவே, அதற்கு மாற்றாக தோஸ்த்ர பாடம் எனப்படும் சமஸ்கிருதப் பாடல்கள் பாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு மாட்டுப் பொங்கல் (ஜன.16) அன்று தேவராஜ் சுவாமி வைபவம் நடந்து கொண்டிருந்தபோது, தோஸ்த்ரப் பாடத்தை இரு பிரிவினரும் பாடி வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது வழக்கம்போல் வடகலை, தென்கலை பிரிவினர்கள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அது சற்று நேரத்தில் கைகலப்பாக மாறி, கடைசியில் அடிதடியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், ஒரு பிரிவினரை மற்ற பிரிவினர் விரட்டி விரட்டித் தாக்குவதும், அவர்கள் தப்பி ஓடுவதும் அங்கிருந்த பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு இரு பிரிவினரும் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த திருவிழாவில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். இந்நிலையில், கோயில் அர்ச்சகர்களின் இரு பிரிவினர் பொது வெளியில் ஒருவரை ஒருவர் மாறிமாறி தாக்கிக் கொண்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலகக்கோரி ஜி.எஸ்.டி துணை ஆணையர் பாலமுருகன் உண்ணாவிரதம்!