செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 27ஆம் தேதி 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கி, ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பினரோடு இணைந்து இந்திய சதுரங்கக் கூட்டமைப்பினர் செய்து வருகின்றனர்.
இந்தப் போட்டிகளில், 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, சென்னை சதுரங்க ஒலிம்பியாட் கமிட்டி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
போட்டிகளுக்கான முன்னேற்பாடு மற்றும் ஒருங்கிணைப்புப்பணிகளை மேற்கொள்ள, தமிழ்நாடு அரசின் சார்பாக தாரேஸ் அகமது, சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகளைக் கவனிக்க, மாமல்லபுரத்திலுள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத் தங்கும் விடுதியில், நிர்வாக அலுவலகம் திறக்கப்பட்டது.
நேற்று (ஏப். 12) மாலை 7 மணியளவில், தமிழ்நாடு இளைஞர்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன் இந்த அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாயவிலைக் கடைகள் பிரிப்பது குறித்து அரசு பரிசீலனை