செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தனியார் செல்போன் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நகரின் முக்கிய சந்திப்புக்கு அருகே இந்த கடை உள்ளது. அதிலும், காவல் நிலையத்தில் இருந்து 100 மீட்டருக்குள் இந்த கடை இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்னதாக நள்ளிரவில் இந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த சில மர்ம நபர்கள், 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்களை திருடிச் சென்றுள்ளனர்.
மேலும், காவல் நிலையத்துக்கு அருகிலேயே இயங்கி வந்த கடையில் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கடைக்கு அருகில் உள்ள நான்கு முனைச் சந்திப்பில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. செல்போன்கள் திருடு போனது குறித்து மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத், சைபர் கிரைம் மற்றும் மதுராந்தகம் காவல் நிலைய போலீசார் ஆகியோரை உள்ளடக்கிய தனிப்படை அமைத்து உடனடியாக கொள்ளையர்களை கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மதுராந்தகம் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் சிவசக்தி மேற்பார்வையில், மதுராந்தகம் காவல் நிலைய ஆய்வாளர் தர்மலிங்கம் தலைமையில், தனிப்பிரிவுக் காவலர் கவியரசன், மாவட்ட சைபர் செல் பிரிவு உதவி ஆய்வாளர் தனசேகரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இதனிடையே மதுராந்தகம் பஜார் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இது போன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவரின் தகவல்கள் முழுமையாக திரட்டப்பட்டன. நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு போலீசாரின் விசாரணை நிறைவு பெற்றது.
இந்த விசாரணையில், அந்த மொபைல் கடையில் திருடியது சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மோகன்ராஜ், கொடுங்கையூர் அடுத்த எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த வினோத், கொடுங்கையூரைச் சேர்ந்த கணேசன் ஆகியோர் என்று தெரிய வந்துள்ளது. இதனையடுத்து விரைந்து செயல்பட்ட தனிப்படையினர் மூவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்களை காவல் துறையினர் கைப்பற்றி உள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்த 72 மணி நேரத்துக்குள் திருடிய மர்ம நபர்களை பிடித்து பொருட்களை மீட்டெடுத்த மதுராந்தகம் காவல் நிலைய போலீசாரையும், தனிப்படையினரையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:Manipur video: 4 பேர் கைது - குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க அரசு பரிசீலனை