செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த வெங்கலேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (40). இவரது மனைவி சித்ரா. இந்தத் தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.
இவர் ஆலத்தூர் அல்கிமார்ஸ் கெமிக்கல் நிறுவனத்தில், ஒப்பந்தத் தொழிலாளியாக நேற்றுதான் (ஏப். 12) பணியில் சேர்ந்துள்ளார். பணியில் இருந்தபோது திடீரென கண்ணன் மயங்கி விழுந்தார்.
இதைக் கண்ட சக ஊழியர்கள் அவரை மீட்டு திருப்போரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் கண்ணனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையறிந்து மருத்துவமனைக்கு வந்த கிராம மக்கள், உறவினர்கள் கண்ணனின் உடலை வாங்க மறுத்து உரிய இழப்பீடு வழங்கக் கோரி தொழிற்சாலையை முற்றுகையிட்டனர். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது, "உயிரிழந்தவருக்கு குறைவான வயது. இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நிறுவனம் தரப்பில் உரிய பதில் கூறவில்லை. இவர் மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தில் பணிபுரிந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் நெடியால் வெங்கலேரி, ஆலத்தூர் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல நோய்களால் அவதிப்படுகின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்றனர். இல்லையெனில் சாலை மறியல் ஈடுபடுவதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மாலத்தீவுக்கு கடத்த இருந்த கஞ்சா ஆயில் பறிமுதல்: 2 பேர் கைது