சர்வதேச திருநங்கைகள் மீதான பொது பார்வைகள் தினம் (International Transgender Day of Visibility) மார்ச் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, பல முக்கியப் புள்ளிகள் களமிறங்கும் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கும் திருநங்கை ராதாவிடம் பேசினோம்.
அப்போது அவர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:
நான் பணத்திற்காக தேர்தலில் போட்டியிடவில்லை. தவறை தட்டிக் கேட்க யாருமில்லை; அதற்காகத்தான் வந்தேன். நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், மீனவர்களுக்கு கடைகள் ஏற்படுத்தி கொடுப்பேன், தண்ணீர் பிரச்னை சரி செய்வேன், திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு, கல்வி, சொத்துரிமை, திருமணம் ஆகியவை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். சமூகத்தில் தற்போது திருநங்கைகளுக்கு மரியாதை கொடுக்கின்றனர்.
திருநங்கைகள் மருத்துவர், வழக்கறிஞர், நீதிபதி, லேப் டெக்னீஷியன் உள்ளிட்ட பல துறைகளில் உள்ளனர். ஆனால் அரசியலில் இல்லை. அவர்களும் என்னைப்போல் அரசியலில் ஈடுபட வேண்டும். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு மக்கள் ஆதரவு பெருகிவருகிறது. திருநங்கைகள் அனைவரும் அவரைப் பற்றித்தான் பேசுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.