அம்பத்தூர், விநாயகபுரம் சேர்ந்தவர்கள் ஸ்ரீதர்-சத்யா தம்பதி. இவர்களுக்கு அஸ்வின்(14) என்ற மகன் உள்ளார். அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் சத்யா, இன்று மதியம் வீட்டிலிருந்து மதிய உணவை மகன் அஸ்வினுக்கு கொடுக்க பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஈவேரா மணிமேகலை தெரு சந்திப்பில் வந்துபோது, பைக்கில் வந்த இருவர் அவரை வழிமறித்து, கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்துள்ளனர். இதனையடுத்து, சத்யா சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் வருவதற்குள், அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனத்தில் ஏறி தங்க சங்கிலியுடன் தப்பி சென்றுள்ளனர்.
இதுகுறித்து சத்யா அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வழிப்பறி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.