மற்றவர்கள் செய்யும் நகைச்சுவையைப் பார்த்தால் மட்டுமே சிரிப்பு வரும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அது இல்லை. சிரிப்பு என்பதன் அர்த்தம் நம் ஆழ்மனதின் இறுக்கத்தையும், மனவலியையும் குறைத்து நமக்குள் ஒருவித புத்துணர்ச்சியை ஏற்படுத்த கடவுள் நமக்கு கொடுத்த வரப்பிரசாதம் தான் சிரிப்பு.
சிரிப்பு சாதாரணமா மட்டும் நினைக்காதீங்க! தன்னம்பிக்கையை வரவழைக்கும் சக்தியும் அதற்குண்டு!
சரி... சிரிப்பு நமக்கு எப்பொழுதெல்லாம் வரும். நகைச்சுவையைப் பார்க்கும்போதும், சிலரின் விநோத செயல்பாடுகளை காணும்போதும் வரும் என்று பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால், சிரிப்பு என்பது பச்சிளம் குழந்தையின் செயலிலும், குறும்பிலும், குழந்தைகளின் சேட்டைகளிலும் அதிகமாக உள்ளது. நாம் நன்றாக உற்று நோக்கினால் தெரியும். குழந்தைகள் விளையாடும்போது ஒரு செயலை செய்ய முற்படும்போது, அதில் தோல்வியைக் காண்பார்கள். ஆனால், எந்தச் சூழலிலும் அதில் வெற்றியைக் காணாமல் அதனைக் கைவிட மாட்டார்கள். அவர்களின் இந்தச் செயல் நமக்கு சிரிப்பை மட்டுமல்ல தன்னம்பிக்கையும் சேர்த்து வரவழைக்கும்.
கிராமப்புறங்களில் சென்று பார்த்தால் தெரியும். வயதானவர்கள் சிறு சிறு விஷயத்தைக் கூட மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அதனைப் பெரிதுபடுத்திப் பேசுவார்கள். இதனைக் காணும்போது நம்மில் பலருக்கு நம்மை அறியாமலேயே சிரிப்பு வரும். இப்படி நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு சூழலிலும் சிரிப்பு அடங்கியுள்ளது. அதை நாம்தான் அறிந்து கொள்ளாமலேயே எந்திர வாழ்க்கையில் மூழ்கியுள்ளோம். இப்பொழுதெல்லாம் நம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் யார் என்று தெரியாத நிலையில் தான் உள்ளோம். சரியாகச் சொல்லப்போனால், ஒரு வீட்டிற்குள் நால்வர் இருந்தாலும், ஆளுக்கொரு தொலைபேசியை கையில் வைத்துக் கொண்டு யாருடனோ இருப்பதுபோல் வசிக்கிறோம். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பதை உணர வேண்டும்.
மனம்விட்டு பேசி சிரிக்க நேரம் ஒதுக்குங்க! மனதை இலகுவாக்குங்க
இதன் அர்த்தம் நம் உறவினர்கள், அண்டை வீட்டார்கள், நண்பர்கள் அனைவரிடமும் மனம்விட்டு பேசும்போதே நம் மனதின் இறுக்கங்கள் தளர்ந்து, சிரிப்பு நம்மை அறியாமல் வெளிப்படும். இதற்கு நாம் அனைவரும் முதலில் மனம்விட்டு பேசவேண்டும். முகம் தெரியாத யாரோ ஒருவருடன் நம்மால் பேசும்போது, நம் குடும்பத்தாருடன் மனம்விட்டு பேச நாம் ஏன் நேரம் ஒதுக்குவதில்லை. இனிமேலாவது தினமும் ஒரு மணிநேரமாவது நம் குடும்பத்தினருடன் சேர்ந்து அமர்ந்து பேசி வாய்விட்டு சிரித்துப் பேசி மகிழ்வோம்.
சிரிப்பால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
சிரிப்பதன் மூலம் நம்முடைய முகம் பொலிவுபெறும். நமது கண்களில் தெளிவும், ஒளியும் உண்டாகும். சிரிக்கும்போது நம்முடைய நுரையீரல் முழுமையாக விரிவடைந்து, சுவாச சக்தியை முழுவதும் கிடைக்கச் செய்கிறது.
இதனால் சிறுநீரக செயல்பாடு, இருதயம் சிறப்பான முறையிலும் நன்கு வேலை செய்கிறது. சிரிக்கும்போது மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டம் துரிதமாகச் செல்வதுடன், தேவையான பிரணவாயு முழுமையாக கிடைக்கிறது. இதன் காரணமாக மூளை புத்துணர்ச்சி அடைந்து ஞாபகசக்தி அதிகரிக்கிறது.
மேலும், சிரிப்பதன் மூலம் நரம்பு மண்டலமே புதுவித உற்சாகத்தைப் பெறுகிறது.
சிரிப்பதால் நாம் அடையும் நன்மைகள் கொஞ்சமல்ல. எனவே, இனிமேலாவது சொந்தங்களுடன் வாய்விட்டுப் பேசி மனதார சிரித்து மகிழ்வுடன் வாழ்வோம். நோய்க்கு குட்பை சொல்வோம்.