தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார், அப்போது, ‘இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளில், நேற்று மட்டும் ஒன்பது லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் பாதுகாப்புக்காக 14 ஆயிரத்து 698 பேர் ஈடுபடவுள்ளனர். புயல் பாதிப்பு தொடர்பாக அமைச்சர்கள் ஆய்வு நடத்த தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்த அறை அனைத்துமே சீல் வைக்கப்பட்டிருந்தது. அதில் எந்த மாற்றமும் இல்லை.
மேலும், இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உளவுப்பிரிவு அலுவலர் சத்தியமூர்த்தியை இடமாற்றம் செய்ய வேண்டும் எனத் தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா பரிந்துரை அளித்திருந்தார். அதனைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளேன். மாற்றுவதா, இல்லையா என்பதைத் தலைமை ஆணையமே முடிவெடுக்கும்.
பிடிபட்ட 2,200 தங்கம் 14 கிலோ மட்டும் கையிருப்பில் உள்ளது. செய்தித்தாள், தொலைக்காட்சி, சமூக வலைதளங்களில் கருத்துக் கணிப்பு நடத்தப்படுகிறது எனப் புகார் வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இடைத்தேர்தல் நடத்துவதற்கு பொதுப்பார்வையாளர்கள் வர உள்ளனர். தேர்தல் நடத்தை விதி 23ஆம் தேதி வரை அமலில் தான் இருக்கும். 10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு குறித்து ஆணையம்தான் அறிவிக்கும்’ என்று கூறினார்.