இந்தியாவின் தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரரும், வீரத்தின் விளைநிலமாக விளங்கியவருமான தீரன் சின்னமலையின் 263ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமது மக்களும், நாடும் யாருக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கக்கூடாது என்பதற்காக வெள்ளையர்களை எதிர்த்து தொடர்ந்து போர்களை நடத்திய தீரன் சின்னமலையின் வீரத்தையும், தீரத்தையும் அவரது பிறந்தநாளில் போற்றுகிறேன்.
ஆங்கிலேயர்கள் அதிநவீனப் போர்க்கருவிகளையும், ஆயிரக்கணக்கில் படைகளையும் வைத்திருந்த நிலையில், திப்புசுல்தான், கட்டபொம்மன், மருதுபாண்டியர்கள் மற்றும் மராத்திய மன்னர்களுடன் துணை சேர்ந்து போர்களை நடத்தி பல போர்களில் வெள்ளையர்களை வென்றவர் தீரன் சின்னமலை ஆவார்.
அவரது வாழ்க்கை வரலாற்றை பள்ளிக்கூடப் பாடத்திட்டத்தில் தமிழ்நாடு அரசு சேர்க்க வேண்டும். விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு மணிமண்டபம் கட்டப்பட வேண்டும் என்று நான் தான் முதன்முதலில் குரல் கொடுத்தேன்’ என கூறப்பட்டுள்ளது.