பொள்ளாச்சி பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஏமாற்றி சீரழித்த கும்பல் தொடர்பான செய்திகளும், வீடியோக்களும் தமிழகத்தையே உலுக்கி வருகிறது. சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு (வயது 27), அவருடைய நண்பர்கள் பொறியாளர் சபரிராஜன் (27), சதீஷ் (27) மற்றும் வசந்தகுமார் (27) ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கை காவல்துறை விசாரித்து வந்த நிலையில், தொடர் அழுத்தம் காரணமாக அது சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கல்லூரி மாணவர்கள், மகளிர் அமைப்புகள் என பலதரப்பட்டவர்களும் பல வகையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, திருப்பூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், பாலியல் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மற்றும், இதற்கு பின்புலத்தில் உள்ளவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, இவ்விவகாரத்தில் ஆளும் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக கூறி கரூர் மாவட்ட அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கல்லூரி, பள்ளி மாணவிகள், இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி, வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவத்தில் முறையாக விசாரித்து, குற்றவாளிகளுக்கும் அவர்களுக்கு பின்புலமாக உள்ளவர்களுக்கும் உடனடியாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நெய்வேலி ஜவகர் கல்லூரி மாணவ மாணவிகள் கண்டன ஊர்வலம் நடத்தினர்.
தமிழகம் முழுவதும் பலரும் கண்டனம் தெரிவித்து, பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருவது தொடர்ந்து வருகிறது. இதனால் போராட்டங்களை தடுக்க தமிழகத்தின் பல பகுதிகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குற்றவாளிகளுக்கும் அவர்களுக்கு பின்புலத்தில் உள்ளவர்களுக்கும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் இந்த வழக்கை அரசு சிபிஐ விசாரணைக்கு மாற்றி அரசாணை பிறப்பித்துள்ளது.