நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் ராஜேஸ்வரி (37), கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முகிலன் மீது கடந்த மார்ச் மாதம் பாலியல் புகார் மனு அளித்திருந்தார்.
அதில், "முகிலன் செய்து வந்த சமூக சேவையால் ஈர்க்கப்பட்டு, அவருடன் இணைந்து சமூக சேவையாற்றி வந்தேன். கடந்த 26.2.2017 அன்று ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக நெடுவாசலில் நடைபெற்ற போராட்டத்தில் அவருடன் பங்கேற்றேன். பின்னர் 27ஆம் தேதி நெடுவாசல் பேருந்து நிலையம் அருகே உள்ள வளாகத்தில் இருவரும் தங்கினோம்.
அப்போது முகிலன், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக்கூறி, என்னைக் கட்டாயப்படுத்தி என்னுடன் உடலுறவு கொண்டார். இதுபோன்று பலமுறை என்னைப் பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
சூழலியல் போராளி முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து காணாமல் போன நிலையில் நேற்று, ஆந்திராவில் உள்ள திருப்பதி ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் முகிலனை காவல்துறையினர் கைது செய்து தமிழ்நாடு சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முகிலன், தற்போது, அப்பெண் அளித்த புகாரின் பேரில், சிபிசிஐடி காவல்துறையினர் இவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.