சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா. சுப்பிரமணியன், "அடையாறு, மத்திய கைலாஷ், ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள அம்பாள் நகர் ஆகிய இடங்களில் ரயில் சுரங்கப்பாதை வசதியுடன் கூடிய நடை மேம்பாலங்கள் கட்ட வேண்டும்" எனக் கோரிக்கைவைத்தார்.
இதற்குப் பதிலளித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, 2011-16ஆம் ஆண்டுகளில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 556 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்.
தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் 304 மேம்பாலங்கள் 919 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளதாகவும், மத்திய கைலாஷ், அம்பாள் நகரில் நடை மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.