பி.இ., பி.டெக். பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ரேண்டம் எண்ணை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 2ஆம் தேதி முதல் 31 ந் தேதி வரையில் பெறப்பட்டுள்ளன. அதில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 494 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 148 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகின்றது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் என அனைத்து மாவட்டங்களிலும் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு விண்ணப்பிக்க 45 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பித்த ஒவ்வொரு மாணவர்களுக்கும் பத்து இலக்கங்கள் கொண்ட ரேண்டம் எண் அவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்களுக்கு எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் வரும் 7ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உதவி மையங்களுக்கு சென்று அசல் சான்றிதழை சரிபார்த்து கொள்ளலாம். சென்னையில் மத்திய பாலிடெக்னிக் கல்லூரி, அண்ணா நூற்றாண்டு நூலகம், பிர்லா கோளரங்கம் என 3 இடங்களில் கூடுதலாக உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசு ஒதுக்கீட்டில் இடங்கள் அதிகமாக இருப்பதால் விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் படிப்பதற்கான இடம் கிடைக்கும். மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 17ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரிவினருக்கும், தொழிற்கல்விக்கான கலந்தாய்வும் நடைபெறும். ஜூலை 3ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். இந்தாண்டு 18 கல்லூரிகள் பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களை சேர்க்கவில்லை என்று கூறியுள்ளன. இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் நான்காம் ஆண்டினை முடிக்கும் வரையில் தொடர்ந்து செயல்படும், என்றார்.