கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 18 பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்புப் படிக்கும் 1,586 மாணவ மாணவிகளுக்குத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ’தனியார்ப் பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது எனக் கூறினால் அந்தப் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அப்பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். ஏற்கெனவே காஞ்சிபுரத்தில் இதுபோன்ற அறிவிப்பு வெளியிட்ட தனியார்ப் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தனியார்ப் பள்ளிகள் மாணவர்களிடம் வாங்கும் கட்டணத்தில் அனைத்து வசதிகளும் செய்ய முடியும். இந்நிலையில் உள் கட்டமைப்பு இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது. அவ்வாறு வசூல் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோபி அருகே உள்ள மலையப்பாளையம் அரசுப் பள்ளி மீது இது போன்ற குற்றச்சாட்டு வந்தது. இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 கி.மீ. தூரம் நடந்து பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கு எஸ்.எஸ்.ஏ. மூலம் வாகன வசதி செய்ய உத்தரவிடப்பட்டது. இதே போன்று பேருந்து வசதி இல்லாத பள்ளிகளுக்கும் மானவர்களை ஏற்றிச் செல்லும் வகையில் வாகன வசதி செய்யப்படும்’ எனக் கூறினார்.