ரயில் நிலையங்கள், ரயில்கள் உள்ளிட்டவற்றில் இந்தி மொழி திணிக்கப்படுவதாக மத்திய அரசு மீது சமீபத்தில் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருக்கிறது. அது போல் மைல்கற்களிலும் இந்தி திணிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து அவற்றுக்கு கருப்பு மை பூசி அழிக்கப்பட்டது. கல்வித் துறையில், மும்மொழிக் கொள்கையைப் புகுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு எழுந்த கடும் எதிர்ப்பினால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு புதிதாக அறிவித்து திறப்பு விழா கண்ட பேருந்துகளில் ’EMERGENCY, FIRE EXTINGUISHER’ என்பது ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே உள்ளது என திமுக எம்.பி கனிமொழி புகைப்படம் ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இதற்குத் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை விளக்கமளித்துள்ளது. அதில், ‘ஒரே ஒரு அரசு பேருந்திலிருந்த, இந்தி அறிவிக்கைகள் அகற்றப்பட்டுவிட்டது. வெளிமாநிலத்தில் தயாரிக்கப்பட்டதால் அந்த பேருந்தில் இந்தி எழுத்துக்கள் இருந்தன. பயணிகளின் சேவைக்கு விடுவதற்கு முன்பே, அவை அகற்றப்பட்டுவிட்டது. இப்போது எந்த பேருந்திலும் இந்தி எழுத்துக்கள் இல்லை’ என கூறப்பட்டுள்ளது.