தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளதால் சென்னை ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யுஅருகே காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் வந்த கால் டாக்ஸியை நிறுத்தி சோதனை செய்தபோது, வாகனத்தில் தங்க முலாம் பூசப்பட்டிருந்த பூஜை பொருட்கள், 38 ஆயிரம் ரூபாய், 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இலங்கை பணம்இருந்தது கண்டறியப்பட்டது.
இது குறித்து டாக்சி ஓட்டுநரிடம்நடத்திய விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் உரிய ஆவணங்களை கேட்டுள்ளனர். அவரிடம் ஆவணங்கள்இல்லை எனத் தெரிந்தவுடன் பணம் மற்றும் பொருட்களைப் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும்படை அலுவலர்களிடம்ஒப்படைத்துள்ளனர்.
அதேபோல், சென்னை அண்ணாசாலை உத்தமர் காந்தி சாலை சந்திப்பில் உள்ள உம்மிடி பங்காரு நகை கடை அருகில் காவல் துறையினர் வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த பொலேரோ வாகனத்தை சோதனை செய்தபோது, 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 189 சவரன் தங்க நகைகள், 142 கேரட் மதிப்பிலான வைரங்கள் ஆகியவை இருந்துள்ளன. வாகனஓட்டுநர் ராஜ்குமாரை (30) விசாரணை செய்தபோது, அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகளை கைப்பற்றிய காவல்துறையினர் தேர்தல் பறக்கும் படை அலுவலரிடம்ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உம்மிடி பங்காரு தங்க நகை கடைக்கு சொந்தமானது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.